STCK : கண்டன்விளை பங்கு

கண்டன்விளை பங்கு - தொடக்க காலம்


கண்டன்விளை ஆலயம், குழந்தை இயேசுவின் புனித தெரேசா 1923 - இல் அருளாளர் பட்டம் பெற்றப்பின் அவருக்கென முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயமாகும். பழம்பெரும் கண்டன்விளை ஆலய வரலாறானது, தெளிவாக எழுதப்பட்டு அண்மையில் ஒரு ஆவணக்குறும்படமாக வெளியிடப்பட்டுள்ளது. இது புனித தெரேசாவின் வரலாற்றையும் அதோடு கண்டன்விளை பங்கின் வரலாற்றையும் உள்ளடக்கியது.

திருத்தந்தை 16 - ஆம் கிரகோரியார், வராப்பொழி மறைமண்டலத்தை நிர்வாக வசதிக்காக, மங்களூர் (வடக்கே), கொல்லம் (தெற்கே) மற்றும் வராப்பொழி (மத்தியில்) என்னும் மறைமாவட்டங்களாகப் பிரிக்க இசைவு தெரிவித்தார். ரோமையிலிருந்து அதற்கு உடன்பாடான பதில் கிடைத்தது. இந்தப் புதிய கொல்லம் மறைமாவட்டமானது, 1845 - ஆம் ஆண்டு மே மாதம் 12 - ஆம் நாள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டது. 1904 - இல் கொல்லம் இணை ஆயர் மேதகு. அலோஷியஸ் மரிய பென்சிகர் கொல்லம் மறைமண்டலத்தை, கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டாறு என்னும் மூன்று மறைமாவட்டங்களாகப் பிரிக்கும் கருத்தை முன்மொழிந்தார்; தற்போதைய கோட்டாறு மறைமாவட்டத்தின் நிலப்பகுதி, கொல்லம் மறைமாவட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்குகிறது.

ஏப்ரல் 29, 1923 - இல் ரோமையில் புனித குழந்தை தெரேசாவுக்கு அருளாளர் பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. விழாவிற்கு அப்போதைய கொல்லம் உயர்மறைமாவட்டத்தின் இணை ஆயராக இருந்த மேதகு. ஆலோஷியஸ் மரிய பென்சிகர் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்; அழைப்பை ஏற்று ஆயர் அவர்களும் விழாவில் கலந்துகொண்டார். அவ்வமையம் அங்கு நடந்த ஆயர் பேரவையில், "கொல்லம் மறைமாவட்டத்திற்குட்பட்ட கண்டன்விளையில் எழுப்பப்படும் ஆலயத்தை புனித குழந்தை தெரேசாவுக்காக அர்ப்பணிக்கிறேன்; மேலும், இவ்வாலயம் புனித தெரேசா அருளாளர் பட்டம் பெற்ற பிறகு அவருக்கென முதன்முதலாக கட்டப்பட்ட ஆலயமாக விளங்கும்" என பிரகடனப்படுத்தி கண்டன்விளையை உலகறிய செய்தார். அதனடிப்படையில் கண்டன்விளையில் எழுப்பப்பட்ட சிறிய ஆலயமானது, ஆயர் மேதகு. ஆலோஷியஸ் மரிய பென்சிகர் அவர்களால் ஏப்ரல் 7, 1924 - இல் அர்ச்சிக்கப்பட்டது. பின்னர் ஆலயமானது மேம்படுத்தப்பட்டு, அன்றையப் பங்குத்தந்தை அருட்பணி. இக்னேஷியஸ் மரியா அவர்களால் ஏப்ரல் 7, 1929 - இல் அர்ச்சிக்கப்பட்டது. ஆவணகுறும்படம் காண்க...

கோட்டாறு மறைமாவட்டம் இந்தியாவின் தென்கோடியிலுள்ள தமிழ்நாடு மாநிலத்திற்குட்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளது. இந்தியாவின் தென்முனையாகிய கன்னியாகுமரி, கோட்டாறு மறைமாவட்டத்தின் ஒரு பங்காகும். இந்தப் புதிய மறைமாவட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இங்குள்ள பங்குகளில் பணியாற்றிய 32 அருட்தந்தையர்களில் 28 பேர் மறைமாவட்ட குருக்கள்; அவர்கள் அனைவரும் இந்தியர்களே. அந்த 28 பேரில் ஏழு பேர் இந்த புதிய மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகும். இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், இந்தியாவிலுள்ள ஆயர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட மூன்றாவது மறைமாவட்டம் கோட்டாறு மறைமாவட்டமாகும். இதன் முதல் ஆயராகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் மேதகு. லாறன்ஸ் பெரேரா என்னும் இந்தியர் ஆவர்.

2014 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 - ஆம் நாளிலிருந்து கண்டன்விளை பங்கானது குழித்துறை மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.