STCK : எமது ஆலயம்

இந்தியாவில் உரோமைக் கத்தோலிக்கம்

இந்திய கிறிஸ்தவ சமூகத்தில் உரோமன் கத்தோலிக்கர் தாம் எண்ணிக்கையில் அதிகம். போர்த்துக்கீசியரின் ஆதரவாலும் இயேசு சபையினரின் தன்னலமற்ற அயரா உழைப்பினாலும் பிற சமயத்தை சார்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு அதிகமாக மதம் மாறிக்கொண்டிருந்தனர், இத்தகைய மத மாற்றத்தால், இந்தியாவிலேயே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் கத்தோலிக்க மறை மாவட்டமாகக் கோட்டாறு மறை மாவட்டம் விளங்கியது. கிறிஸ்துவின் சீடர்களில் ஒரவரான புனித தோமையார் (கி.பி 52 - 68) இந்தியாவிற்கு வந்து முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவத்தை அறிமுகம் செய்து வைத்தார். 1498 - இல் அல்மேய்டா என்பவர் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி இந்தியாவிற்கு கடல் வழி கண்டு பிடித்தது முதல் நற்செய்தி அறிவிப்புப் பணிக்குப் புதிய காலக்கட்டம் உருவானது. 1534 - ஆம் ஆண்டு திருத்தந்தை 3 - ஆம் பவுல் கோவா மறைமாவட்டத்தை உருவாக்கி அதை கீழை நாடுகளின் தலைமை இடமாக அமைத்த்தார்.

ஐரோப்பாவில் கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கம் தோன்றிய போது, புனித இஞ்ஞாசியார் திருச்சபையைப் புதுப்பிப்பதற்காகவும் அன்றைய கிறிஸ்தவர்களின் தவறான போக்குகளைத் திருத்துவதற்காகவும் முனைந்தார். 1539 - ஆம் ஆண்டு புதிய ஒரு துறவற சபையை நிறுவுவதற்கான அனுமதியைத் திருத்தந்தை வழங்கினார். இங்ஙனம் 1540 - ஆம் ஆண்டு "இயேசு சபை" உருவானது. புனித இஞ்ஞாசியார் இந்த சபைக்கான ஒழுங்கு முறைகளையும் சட்டத்திட்டங்களையும் உருவாக்கினார்.

இயேசு சபையினர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு தங்களுடைய குருக்கள் மெய்யியலிலும், இறையியலிலும் நீண்டகாலம் பயிற்சிகள் பெற வேண்டுமென்று பணித்தார். இது, பேரறிஞர் பலரை உருவாக்கியது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அதைச் சுற்றிய தீவுகளிலும் நற்செய்தி அறிவிப்பின் முன்னோடியாகத் திகழ்ந்த புனித பிரான்சிஸ் சவேரியார், கத்தோலிக்க மறுமலர்ச்சியின் விடிவெள்ளியாகவும், இயேசு சபையின் சிறந்த செயல்வீரராகவும் விளங்கினார். தூய சவேரியார் பத்து ஆண்டுகளே (1542 - 1552) கீழை நாடுகளில் பணிபுரிந்தார். ஆனால் இந்த குறுகிய காலத்தில் அவர் கிறிஸ்தவத்தைப் பல இடங்களில் பரப்பினார். கிறிஸ்தவ விசுவாசத்தை ஜப்பானிலும் அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியில் மக்களுக்கு மறைக்கல்வி புகட்டவும், ஜெபங்களை கற்பிக்கவும் அவர்களுடைய மொழியைப் பயின்றார். குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்தினார். குழந்தைகளை தங்கள் பெற்றோருக்கு கல்வி புகட்டத் தூண்டினார். பல கிராமத்து மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கினார். வேதியர்களை நியமித்து அவர்களுக்குத் தொடர் பயிற்சியும் வழங்கினார். அவரது அயரா உழைப்பினால் பிற்படுத்தப்பட்ட மக்களின் பொருளாதார நிலையும் உயர்ந்தது. புனித சவேரியாரே கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்காகக் கோட்டாற்றுக்கு வந்தார். சீனாவிற்கு செல்லும் வழியில் இறந்து விட்டார். கோட்டாற்றில் அமைந்துள்ள பேராலயம் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் தென்னிந்திய கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டுத் தலங்களில் முக்கியமான ஒன்றாகும்.

குழந்தை இயேசுவின் புனித தெரேசாவை பாதுகாவலியாகக் கொண்ட கண்டன்விளை பங்கும் கோட்டாறு மறைவாட்டத்திற்குட்பட்டதாகும் (2014, டிசம்பர் 22 - ஆம் நாளிலிருந்து குழித்துறை மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது).


தினசரி திருப்பலி மற்றும் ஜெபம்

வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 6:15 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மக்கள் ஆலயத்திற்கு வந்து பக்தி முயற்சிகளிலும், ஜெபங்களிலும் பங்கெடுத்து விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.


வாரநாள் வழிபாடுகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி காலை 7:00 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறது. பங்கு மக்கள் திருப்பலியில் பங்கேற்பது அவர்களது ஆன்மீகக் கடமை. திங்கட்கிழமை தோறும் மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை ஜெபக்குழு நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 2:30 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் நடைபெறுகிறது. வியாழக்கிழமைகளில் மாலை 6:16 மணிக்கு ஜெபமாலையும், குழந்தை இயேசுவின் புனித தெரேசா நவநாள் திருப்பலியும் நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை தோறும் காலை 11:00 மணிக்கு ஜெபமாலை மலை சிற்றாலயத்தில் வைத்து ஜெபமாலையும், தொடர்ந்து திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. பங்கு மக்கள் பலிபீடம் மற்றும் வாசகப்பீடத்தை அலங்கரிப்பதிலும், மையச்சிந்தனையை எழுதி வைத்தல் போன்ற பல காரியங்களைச் செய்வதிலும் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றனர். மதம், ஜாதி, இனம் இவற்றைக் கடந்து மனித இனத்தின் ஒருமைப் பாட்டிற்காக ஜெபங்கள் ஜெபிக்கப்படுகின்றன.


மாதாந்திர விழாக்கள்

மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 6:15 மணிக்கு ஜெபமாலை மலையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. முதல் சனிக்கிழமை தவிர, மற்ற சனிக்கிழமைகளில் (2, 3, 4 மற்றும் 5) காலை 6:15 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருமுழுக்குத் திருப்பலி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, காலை 10:00 மணி முதல் நண்பகல் 1:00 மணி வரை நற்செய்திக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது.


வழிப்பாட்டு ஆண்டின் வழிப்பாடுகள்

ஒவ்வொரு டிசம்பர் மாதம் 31 - ஆம் தேதி இரவு 11:00 மணிக்கு நற்கருணை எழுந்தேற்றம் செய்து வைத்து, கடந்த ஓராண்டு காலமும் இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றியாகவும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியும் ஜெப வழிபாடு நடத்தப்பட்டு ஆசீர் வழங்கப்படும். தொடர்ந்து புத்தாண்டு திருப்பலி சிறப்பாகக் கொண்டாடப்படும். புத்தாண்டு அன்று காலை, 7:00 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் இறையாசீர் பெற இறைமக்கள் பெருந்திரளாக வருகின்றனர். அதைத் தொடர்ந்து பல சிறப்பு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. ஜனவரி 14 - ஆம் நாள் "அறுவடை விழா" என்ற பெயரில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. அன்று திருச்சபை நிலத்தில் நிறைவான விளைச்சலையும், அறுவடையையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல கூடி வருகின்றனர். ஜனவரி 26 - ஆம் நாள் இந்திய குடியரசு தினம் நாட்டுப்பற்றை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.

பெப்ரவரி 2 - ஆம் நாள் ஆண்டவர் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பெப்ரவரி 11 - ஆம் நாள் லூர்து அன்னை திருவிழா; அந்நாளில், மெழுகுதிரி பவனியும், கெபியில் திருப்பலியும் நடைபெறும்.

திருநீற்றுப் புதன் தவக்காலத் துவக்கமாக அனுசரிக்கப்படுகிறது. தவக்காலத்தில், மக்கள் ஜெபம், தவம், தானம் ஆகியவைகளில் ஈடுபடுகின்றனர். பெரிய வெள்ளிக்கிழமை திருச்சடங்குகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நற்கருணை ஆராதனை, திருச்சிலுவை ஆராதனை முதலியவற்றில் மக்கள் உருக்கமாக பங்கெடுத்து வருகின்றனர். உயிர்ப்பு ஞாயிறு, கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மே மாதம் 1 - ஆம் நாள், புனித சூசையப்பர் திருவிழாவாகவும், தொழிலாளர் தினமாகவும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் திங்கள் 15 - ஆம் நாள் அன்னையின் விண்ணேற்புத் தினமாகவும், இந்தியாவின் சுதந்திர தினமாகவும் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதத்தின் இறுதிவாரம் மிக முக்கியமானது; என்னவென்றால், மாக்கள் கூடிவந்து மகிழ்வர். அக்டோபர் மாதம் மறைபரப்புப் பணிக்காக ஞாயிறன்று சிறப்புக் காணிக்கைப் பிரிக்கப்படுகிறது. நவம்பர் மாதம் 1 - ஆம் தேதி நமது வாழ்வுக்குச் சிறந்த மாதிரியாகத் திகழ்கின்ற அனைத்துப் புனிதர்களுடைய விழா சிறப்பிக்கப்படுகிறது. நவம்பர் மாதம் 2 - ஆம் தேதி கொண்டாடப்படும் இறந்த அனைவரின் நினைவுநாள் மனித வாழ்க்கையின் நிலையாமையை மட்டுமல்ல, இறப்புக்குப் பின் வரும் உயிர்ப்பையும் நினைவுப்படுத்துகிறது. அன்று கல்லறைத் தோட்டத்தில், சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கல்லறைகளும் மந்திரிக்கப்படுகின்றன. டிசம்பர் 8 - ஆம் நாள் அமல அன்னையின் திருவிழா கெபியில் ஜெபமாலை மற்றும் பவனியுடன் சிறப்பிக்கப்படுகிறது. டிசம்பர் 25 - ஆம் நாள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவில் மக்கள் பெருந்திரளாகப் பங்கெடுக்கின்றனர். அற்புதமான குடில்களும், அழகுற அமைக்கப்பட்டுள்ள விளக்குகளும், மக்களுடைய இல்லத்தில் ஆட்சிபுரியும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி இவைகளுக்கு முன் அடையாளமாகத் திகழ்கின்றன.


"கண்டன்விளை" பங்கு அமைவிடம்

75 ஆண்டுகளுக்கு முன்னர், கண்டன்விளை பங்கு கொல்லம் மறைமாவத்தின் கீழ் காரங்காடு பங்கின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. அவ்வமயம், திரு. பாக்கிய நாதன் என்பவர் தலைமையில் மறைமாவட்டத்திற்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில், கண்டன்விளையில் ஒரு ஆலயம் கட்ட வேண்டுமென அப்போதைய கொல்லம் ஆயர் பேரருட் பெருந்தகை ஆலோஷியஸ் மரிய பென்சிகர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவ்விண்ணப்பத்தை ஆயர் அவர்கள் ஏற்றுக்கொண்டு காரங்காடு பங்குத்தந்தையோடு இணைந்து கண்டன்விளையில் ஆலயம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வதற்காகக் கண்டன்விளைக்கு வந்தார்.

பல இடங்களைப் பார்வையிட்டார்; அவைகளில் பெரும்பாலானப் பகுதிகள் மிகவும் தாழ்வானப் பகுதிகளாகவும், மழைக்காலங்களில் நீர்தேங்கும் பகுதிகளாகவும் தென்பட்டன. இறுதியில், ஓரிடத்தைத் தேர்வு செய்தார். ஆயர் கனவில் கண்டதும் தேர்வு செய்ததும் ஒரே இடமாக இருந்தது. ஆயர், பங்குத்தந்தை மற்றும் மக்கள் அனைவரும் இணைந்து மகிழ்ந்து அவ்விடத்தை உறுதி செய்தனர்; அதுவே, கண்டன்விளை என்பதாகும்.

1923 - ஆம் ஆண்டு, குழந்தை தெரேசாவுக்கு அருளாளர் பட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஆயர் அவர்கள், திருத்தந்தை 11 - ஆம் பயஸ் அவர்களிடம், குழந்தை தெரேசாவின் பெயரால் ஒரு ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தார். அதனடிப்படையில், கண்டன்விளையில் கட்டி எழுப்பப்பட்டிருந்த ஆலயத்தை 1924 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 - ஆம் நாள் அர்ச்சித்து புனித தெரேசாவுக்காக அற்பணித்தார்; அதைத் தொடர்ந்து திருவிழாவும் கொண்டாடப்பட்டது. 1925 - ஆம் ஆண்டு மே மாதம் 17 - ஆம் நாள், குழந்தை தெரேசா புனிதையாக அறிவிக்கப்பட்ட நிகழ்வில், புனித குழந்தை தெரேசா அருளாளர் பட்டம் பெற்றபின் அவரது பெயரால் அமைக்கப்பட்ட முதல் ஆலயம், கொல்லம் மறைமாவட்டத்திற்குட்பட்ட கண்டன்விளையில் அமைந்துள்ள ஆலயம் தான் என அறிவித்து கண்டன்விளையை உலகறியச் செய்தார். (டிசம்பர் 22, 2014 அன்று முதல், கண்டன்விளை ஆலயம் குழித்துறை மறைமாவட்ட விதிகளுக்குட்பட்டு செயல்பட்டு வருகிறது.)


மேம்படுத்தப்பட்ட ஆலயக் கட்டுமானப் பணி

1924 - ஆம் ஆண்டு, கண்டன்விளை ஆலயம் புனித குழந்தை தெரேசாவுக்காக அற்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் என்றப் பெருமையாலும், புனிதையின் வழியாக பக்தர்கள் பெற்றுக்கொண்டப் புதுமைகளினாலும், ஆலயத்திற்கு வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாட்கள் செல்ல செல்ல அதிகரிக்கத் துவங்கியது. இவைகளைக் கருத்தில் கொண்டும், வழிபாட்டிற்கு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ஆலயத்தை மேம்படுத்தப்பட்ட ஆலயமாக மாற்ற வேண்டும் என்ற ஆவலினாலும், அன்றைய முன்னாள் பங்குத்தந்தை அருள்பணி. இக்னேஷியஸ் மரியா அவர்களின் தலைமையில், ஆலய மேம்பாட்டுப் பணியானது 1927 - ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

தொடக்கத்தில் 61/2 அடி நீளமும் 31/2 அடி அகலமும் கொண்ட அடித்தளம் இடப்பட்டது. கட்டுமான அடித்தளம் பணியில், தலைமைப்பணியாளராகத் திகழ்ந்தவர் திரு. ஆலோஷியஸ் என்பவர் ஆவர். கல்லடித்தட்டு விளையச் சேர்ந்த திரு. ஞாப்பிரகாசம் என்பவர் நன்கொடையாக நல்கிய 27 அடி நீளமுடைய ஒரே பனைமர உத்திரம் கூரைக்கு பயன்பத்தப்பட்டது. அவரது நினைவாக, அவருடைய பெயரின் சுருக்கெழுத்துக்கள் (D.G) என்று உத்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. கட்டடம் உறுதியாக இருக்கும் பொருட்டு, சுண்ணாம்பு, பதநீர் கலந்த கலவை சாந்தாகப் பயன்படுத்தப்பட்டது. பண்டாரவிளையைச் சார்ந்த திரு. கபிரியேல் பீடத்தின் தூண்களுக்கு நன்கொடை வழங்கினார். கட்டுமானப் பணியாளரான திரு. அலங்கார் என்பவர், தம்முடைய தனித்திறமையை கட்டுமானப் பணியில் காட்டினார். சித்தன்தோப்பைச் சார்ந்த திரு. மாசிலாமணி பண்டாரவிளையச் சார்ந்த திரு. வறுவேல், திரு. கபிரியேல் மற்றும் திரு. மரியஞானம் என்பவர்கள் பாண்டிச்சேரியிலும், அண்டை ஊர்களிலும் நன்கொடைப் பிரித்துத் தாராளமாக வழங்கியதால் கட்டுமானப் பணி சிறப்பாக நடைப்பெற்றது.

பிற ஜாதியினர், தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டக் காலத்தில் பல இனத்தவர்களும் இந்த ஆலய கட்டுமானப் பணிக்கு துணை புரிந்தனர். கிருஷ்ணன் வகையைச் சார்ந்த திரு. மகேஸ்வரன் பல பனைமரங்களை நன்கொடையாக வழங்கினார். மீனவர்கள் மகிழ்ச்சியாக நிறைவாகக் கொடுத்து குழந்தை தெரசாவைக் "கடல்களின் அரசி" என்று அழைத்தனர். பணியாட்களும், தங்களால் இயன்ற நன்கொடைகளைக் கொடுத்தனர். திருவிழா நாட்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு தேரினை அன்பளிப்பாகக் கொடுத்தனர். சித்தன்தோப்பைச் சார்ந்த தச்சுத் தொழில் செய்பவர்களும், பிறரும் ஆலயத்திற்கு ஒரு பெரிய தேரினை அன்பளிப்பாக வழங்கினர். சித்தன்தோப்பு மற்றும் பண்டாரவிளை இறைமக்கள் ஆலய கட்டுமான பணிக்காக நன்றி நிறைந்த நெஞ்சோடு தாராளமாக நன்கொடைகள் வழங்கினர்.


கட்டுமானப் பணி நிறைவு

மேம்படுத்தப்பட்ட ஆலயக் கட்டுமானப் பணியானது ஏறத்தாழ 18 மாதங்கள் கழிந்து, 07.04.1929 அன்று நிறைவுற்றது; பின்னர் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திருவிழாவும் கொண்டாடப்பட்டது. ஆலயத்தின் தரை மற்றும் கூரைக்குத் தேவையான ஓடுகளை 8 ஓடு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இனாமாக வழங்கினார்கள். கல் வேலைப்பாடுகளைக், கண்டன்விளை மக்கள் மிகச்சிறப்பாக செய்து முடித்தனர்.

1924 - 1944 வரை அருட்தந்தை. இக்னேஷியஸ் மரியா, வர்க்கீஸ், D.C. ஆன்றனி முதலானோர் பங்கு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் அக்கறை காட்டினர். 1944 - ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 5 - ஆம் நாள் கண்டன்விளை தனிப்பங்காக நிலை உயர்த்தப்பட்டது. பங்கின் முதல் பங்குத்தந்தையாக, அருட்தந்தை. V.J. ஸ்டீபன் அவர்கள் பணியேற்றார்.

இந்த ஆலயம்தான், புனித தெரேசா அருளாளராக பிரகடனப் படுத்தப்பட்டபின் முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்பதால் புனித தெரேசாவின் உடன் பணியாற்றிய கார்மல் சபையைச் சார்ந்த அருட்சகோதரியரும், புனித குழந்தை தெரேசா பிறந்த லிசியேவிலுள்ள மக்களும் 2 ஆலய மணிகளை அன்பளிப்பாக கொடுத்தனர். அதில் கீழ்கண்ட வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன:

Michiels A.Tournai 1931: என்னுடைய பெயர் குழந்தை இயேசுவின் தெரேசா. நான் இந்திய மக்கள் அனைவரையும் கண்டன்விளைக்குக் கூட்டிச் சேர்ப்பேன்.

Michiels A.Tournai Fondeur என்னுடைய பெயர் சிலுவை யோவான். விண்ணில் இருக்கும் என் சகோதரி குழந்தை இயேசுவின் புனித தெரேசாவின் மகிமைக்காக நான் ஒலித்திக் கொண்டிருப்பேன்.

இந்த மணிகள் ஆலயத்தின் வடக்குப் புறத்தில் அமைந்துள்ள மணிக்கோபுரத்தின் இடப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இது புனித தெரேசா இந்தியாவிலுள்ள அனைவரையும் கண்டன்விளையில் கூட்டிச் சேர்த்து அவர்களுக்கு குழந்தை இயேசுவின் தெரேசாவின் வாழ்க்கையை எடுத்துரைக்கிறது.

ஆலயத்தின் வடக்குப் பகுதியில் இறை அன்னை லூர்து நகரில் பெர்னதெத்துக்கு காட்சி கொடுத்ததன் நினைவாக, அழகிய கெபி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கெபி, 1945 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 - ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது. புனித லூர்து அன்னையின் விழா அன்றும், அமலோற்பவ அன்னை திருவிழா அன்றும், கெபியில் சிறப்புத் திருப்பலிகள் கொண்டாடப்படுகின்றன.

இவ்வாலயத்தின் மற்றுமொரு சிறப்பு யாதெனில், ஒரே கல்லிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு செதுக்கப்பட்ட 50 அடி உயர கொடிமரம். இந்தச் சீரிய பணியை, பருத்திவிளையைச் சேர்ந்த கல் தொழிலாளர்கள் செய்து முடித்தனர். இந்த கொடிமரம், அருட்தந்தை. V.J. ஸ்டீபன் அவர்களின் காலத்தில், 1948 - ஆம் ஆண்டு 24 - ஆம் நாள் பயன்பாட்டிற்கு வந்தது.

1949 - ஆம் ஆண்டு அன்றைய பங்குத்தந்தை பயஸ் J. மோரீஸ் அவர்கள் ஆலயத்தின் தெற்குப் பகுதியில் நிலம் வாங்கி அதை ஜெபமாலை மலை என்று அழைத்தார். பிற்காலத்தில், அருட்தந்தை. V. ஹில்லாரியஸ் அங்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்பினார். 2000 - ஆம் ஆண்டு மாபெரும் யூபிலி கொண்டாட்டத்தின் போது அருட்தந்தை. S. இயேசு ரெத்தினம் அவர்கள் அந்த நினைவு மண்டபத்தை அகற்றி சிற்றாலயம் ஒன்றைக் கட்டத் துவங்கினார்.

அருட்தந்தையர்கள் மரியமிக்கேல், வின்சென்ட்ராஜ் ஆகியோர் காலத்தில் கட்டடப்பணி தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. பங்கு மக்களின் தாராள நன்கொடையால் ஜெபமாலை மலையின் கட்டுமானப்பணி நிறைவு பெற்றது. இந்த ஜெபமாலை மலையிலிருந்து பார்க்கும் போது அருகில் அமைந்துள்ள மலைத்தொடர்களும், தென்னை மரத்தோப்புகளும், முட்டத்தில் இருக்கும் அரபிக் கடலும் பார்பவர்கள் கண்களுக்குப் பரவசமூட்டும். ஜெபமாலை மலைக்குச் செல்லும் வழிப்பகுதியில், சிலுவைப்பாதையின் 14 நிலைகளும் அருமையாக பொறிக்கப்பட்டுள்ளன.

ஆலயத்தின் தென்பகுதியிலுள்ள சாலை ஓரத்தில் இறைமக்களின் பக்தியை வளர்க்கும் அழகிய குருசடி ஒன்றை அருட்தந்தை. பெனடிட் J.R. அலெக்சாண்டர் அவர்கள் 1967 - ஆம் ஆண்டு நிறுவினார்.


1968 - ல் ஆலயம் புதுப்பித்தல்

1968 - ஆம் ஆண்டு அருட்தந்தை. M. மரிய கிரகோரி அவர்கள், ஆலயத்தின் தலைவாயில் பகுதியை அடித்தளம் மற்றும் கல்லிலான தூண்களை அமைத்து விரிவுப்படுத்தினார். உடல் பலவீனக் காரணத்தால், அவர் பங்கின் பொறுப்பிலிருந்து 1972 - ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்றார். அவரைத் தொடர்ந்து, அருட்தந்தை. C.N. வென்சஸ்லாஸ் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்று அருட்தந்தை. M. மரிய கிரகோரி விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்தார்.

1976 - ஆம் ஆண்டு அருட்தந்தை. T. ஜேசுதாசன் தாமஸ் அவர்கள் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். அவரது பணிக்காலத்தில், ஆலயத்தின் தலைவாயிலின் விரிவாக்கமும் கோபுரமும் முடிக்கப்பட்டு, 1979 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 - ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது. இதன் மூலம், ஆலயத்தின் 2 - ஆம் கட்ட கட்டடப் பணியானது நிறைவுப்பெற்றது.

அருட்தந்தை. M. அருள் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்தபொழுது, பங்குமேய்ப்புப்பணிக் குழு மற்றும் பங்கில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கத்தோலிக்கச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஆலயத்தின் மேற்கு ஓரமாக சிறுமலர் கலையரங்கத்தை 1991 - ஆம் ஆண்டு கட்டி முடித்தார். இவ்வரங்கானது, ஜெபவழிபாடு, ஆலய சம்மந்தமான பொதுக்கூட்டங்கள் மற்றும் திருவிழா காலங்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் பங்கு மக்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் இன்றும் பயன்பட்டு வருகிறது.


1992 - முதல் 2002 வரையுள்ள புனரமைப்பு

1992 - ஆம் ஆண்டு பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற அருட்தந்தை. S. சாலமன் அவர்கள் மக்களின் தாராள மனதைத் தட்டி எழுப்பி நன்கொடைகளைப் பெற்று ஆலயத்தின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளை புனரமைத்தார்; மேலும், வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களைக் கட்டி முடித்து 1994 - ஆம் ஆண்டு செப்டம்பர் 23 - இல் அன்றைய கோட்டாறு ஆயர் மேதகு. லியோண் A. தர்மராஜ் அவர்களின் தலைமையில் அர்ச்சிப்பு விழாவும் நடத்தினார்.

பங்கு சார்ந்த பொதுநிகழ்ச்சிகள், திருமணம் மற்றும் கலைநிழ்ச்சிகள் நடைபெறும் வண்ணம், ஆலயத்திற்கு சொந்தமாக ஒரு கலையரங்கம் அமைப்பது தொடர்பாக 1996 - ஆம் ஆண்டு ஒரு சுமுகமான தீர்மானம் பங்குப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதன்பொருட்டு, அருட்தந்தை. B. ரசல்ராஜ் அவர்களின் பணிக்காலத்தில் 1997 - ஆம் ஆண்டு தூய தெரஸ் அரங்கின் கட்டடப் பணியானது ஆரம்பிக்கப்பட்டு, அருட்தந்தையர்கள் S. இயேசுரெத்தினம் மற்றும் F. மரியமிக்கேல் ஆகியோர்களின் பெரும் முயற்சியால் 2002 - ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

ஆலயத் திருவிழா 9 - ஆம் நாள் மாலையில், இயேசுவின் திருவுருவம், அன்னை மரியாள் மற்றும் திருச்சிலுவை ஆகியவைகளைத் தாங்கி நிற்கும் இரு தேர்கள், மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் மிகவும் அருமையாக அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்துவரப்படும்; இந்த பவனியானது, குடும்ப விழாவான 10 - ஆம் திருவிழா திருப்பலியின் பிறகும் தொடர்ந்து பவனியாக ஆலயத்தைச் சுற்றி எடுத்துவரப்படுகிறது. பவனியில் கலந்துகொள்ளும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறுப் பகுதியிலுள்ள இறைமக்கள் பலர் இறைவனின் கொடைகளை புனித தெரசாள் வழியாகப் பெற்று வருகிறார்கள். திருவிழா காலங்களில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சிறப்புப் பேருந்து வசதிகளும் தொன்றுதொட்டே செய்யப்பட்டு வருகிறது.

முற்காலத்தில் பங்குமக்களின் இறுதிச்சடங்கு (நல்லடக்கம்) முறையானது, அவரவர்க்கு சொந்தமான இடங்களிலேயே நடைப்பெற்றது. பின்னர், நன்கொடை மூலம் வாங்கப்பட்ட 1.5 ஏக்கர் நிலப்பரபானது ஆலயத்திற்குட்பட்ட பொதுக் கல்லறைத் தோட்டமாக மாற்றப்பட்டு, இறுதிச்சடங்கானது பொதுவான சடங்கு முறையாக மாற்றும் கண்டது. ஒவொரு நவம்பர் மாதமும் 2 - ஆம் நாள், அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு இங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது.


கிளைப்பங்கு ஆலயங்கள்

1. இரணியல்

இரணியல் பங்கானது, கண்டன்விளை ஆலயம் கோட்டாறு மறைமாவட்டத்தின் ஒரு பங்காக நிலை உயர்வு பெற்ற அதே சமயம் (1944) தான் மூன்று கிறிஸ்தவ சமூகங்களுடன் கண்டன்விளையின் ஒரு கிளைப்பங்காக அறிவிக்கப்பட்டது. புனித தோமையார் இவ்வாலயத்தின் பாதுகாவலராக திகழ்கிறார். பிரிதி ஞாயிறு காலை 9:00 மணிக்கும், செவ்வாய்கிழமை மாலை 6:00 மணிக்கும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. பங்கு அருட்பணிப்பேரவை பங்கின் நிர்வாகத்தை மிகச் சிறப்பாகக் கவனித்து வருகிறது.

2. சித்தன்தோப்பு

அருட்தந்தை. T. ஜேசுதாசன் தாமஸ், அவர்களுடைய பணிக்காலத்தில் (1976 - 1980) பண்டாரவிளைக்கு அப்பால் 250 கிறிஸ்தவ குடும்பங்கள் அடங்கிய சித்தன்தோப்பு என்ற பகுதி கண்டன்விளையின் ஒரு கிளைப்பங்காக அமைத்து ஐந்து கிறிஸ்தவ சமூகங்களுடன் செயல்பட வைத்தார். இவ்வாலயத்தில், புனித அலங்கார அன்னையை பாதுகாவலியாக ஏற்று திருவழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. பிரிதி ஞாயிறு காலை 5:30 மணிக்கும், ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் 15 - ஆம் நாள் அன்னையின் விழா பத்து நாட்களாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பங்கு அருட்பணிப்பேரவை பங்கின் நிர்வாகத்தை மிகச் சிறப்பாகக் கவனித்து வருகிறது.

3. பண்டாரவிளை

அருட்தந்தை. J.R. பேட்ரிக் சேவியர் அவர்களுடைய பணிக்காலத்தில் (2012 - 2015), பண்டாரவிளை பங்கானது கண்டன்விளையின் புதிய கிளைப்பங்காக உருவானது. அதன்பொருட்டு, பண்டாரவிளையில் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டு 2015 - ஆம் ஆண்டு மே மாதம் 15 - ஆம் நாள் கோட்டாறு மறைமாவாட்ட ஆயர் மேதகு. பீட்டர் ரெமிஜூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு தூய ஆரோக்கிய அன்னைக்காக அற்பணிக்கப்பட்டது. தினமும் மாலை 6:00 மணிக்கு திருஜெபமாலையும், ஒவ்வொரு புதன்கிழமை மாலை 6:30 மணிக்கு திருப்பலியும் நடைபெற்று வருகிறது. தற்பொழுது இங்கு மூன்று அன்பியங்கள் மிகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.